Wednesday 4 January 2012

ஆஸ்திரேலியாவின் தோட்ட நகரம் ட்டூவூம்பாவின் மலர்விழா

2010 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா சென்றபோது ட்டூவூம்பாவின் மலர்த்தோட்டங்கள் பலவற்றைக் கண்டுகளித்தேன். அப்போது நான் எடுத்த சில புகைப்படங்களும் அம்மலர்விழா பற்றிய சில தகவல்களும் கீழே.



ஆஸ்திரேலியாவின் கிழக்கு மாநிலமாகிய க்வீன்ஸ்லாந்தின் தலைநகரம் பிரிஸ்பேன். இதற்கு மேற்கே 130 கி.மீ. தொலைவில், கடல் மட்டத்துக்கு 700மீ. உயரத்தில் சுமார் 1 லட்சம் மக்கள் தொகை கொண்டதாக அமைந்துள்ள நகர் ட்டூவூம்பா.



இங்கே அண்டுதோறும் மலர் விழா (கார்னிவல்) நிகழ்கிறது. தொடங்கி 60 ஆண்டு ஆகிவிட்டதால் இப்போது வைரவிழாவாகக் கொண்டாடினார்கள். செப்டம்பர் 18 முதல் 27 முடிய பத்து நாள் இந்த விழா நடந்தது.




1950 இல் நடைபெற்ற முதல் கார்னிவலில் சிறப்பிடம் பெற்ற ஃபே ரியான் என்ற பெண்மணி (தற்போது 80 வயது) விழாவைத் தொடங்கிவைத்தார். அணிவகுப்பு ஊர்வலம் புறப்பட்டது. பேண்டு வாத்தியக்காரர்கள் இன்னிசை வழங்கியபடி நடைபோட, மலர்களால் தங்களை அலங்கரித்துக் கொண்ட மக்கள் தொடர்ந்து வர, அலங்கார ஊர்திகள் வரிசையாய்ச் செல்லப் பத்தாயிரக்கணக்கான மக்கள் பார்த்துப் பரவசமுற்றார்கள். ஊர்வலத்தில் புகழ் பெற்றப் பாடகர்கள், தொலைக்காட்சிப் பிரபலங்களும் கலந்துகொண்டு சிறப்பித்தார்கள்.





நாள்தோறும் அங்கங்கு பாட்டு, நடனம் எனக் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. இறுதிநாள் முன்னிரவில் வாணங்கள் வர்ண ஜாலங்களை வாரியிறைத்து வானத்தை நிறைத்தன.




நகரவாசிகளுள் வசதி வாய்ப்பு மிக்கவர்கள் தத்தம் இல்லத் தோட்டங்களில் கண்ணைப் பறிக்கும் புதுப்புது வகைப் பூச்செடிகளைக் கலைநயத்துடன் பொருத்தமான இடங்களில் வளர்த்தும் மலர்ச்சட்டிகளை அங்கங்கு நேர்த்தியாக அமைத்தும் பொது மக்கள் இலவசமாக வந்து பார்த்துக் களிக்க ஏற்பாடு செய்கிறார்கள். இந்தத் தடவை 70 தோட்டங்கள் மக்களை வரவேற்றன. ஆண்டுதோறும் அவற்றின் எண்ணிக்கை அதிகமாகிறது. பெரிய தோட்டங்கள் 5000 சதுர அடிக்கு மேலும் பரப்புடையவை. செடி விற்பனையும் உண்டு. பற்பல தெருக்களில் உள்ள அந்தத் தோட்டங்கள் எல்லாவற்றையும் ஒன்றுவிடாமல் போய்க் கண்டு மகிழ்வதற்கு நேரம் வேண்டும், சிரமத்தைப் பொருட்படுத்தாத மனவுறுதியும் தேவை. முடிந்தவரை அன்றன்று சிற்சில இடங்களுக்குச் சென்று வருவதே பெரும்பாலோர்க்குச் சாத்தியம்.

 

நகரின் தகவல் மையம் மேப்பும், முகவரிப் பட்டியலும் இலவசமாக வழங்குகிறது. அதை வைத்துக்கொண்டு தேர்ந்தெடுத்துப் போய் வருவது வீண் அலைச்சலைத் தவிர்க்கிறது. அவசியம் காண வேண்டிய தோட்டங்களைப் பற்றியும் தகவல் மையம் தெரிவிக்கிறது.

விழாவுக்கு ஏற்பாடு செய்கிற நகர நிர்வாகம் தோட்டங்களைப் பெரியவை, சிறியவை, புதியவை, நர்சரி, கல்லூரித் தோட்டங்கள் எனப் பலவகையாய்ப் பிரித்து அவற்றுள் சிறந்தவற்றுக்கு வகைக்கு 3 ஆகப் பரிசு வழங்கி ஊக்குவிக்கிறது. பரிசுக்கு உரியவர்களைத் தேர்ந்தெடுக்க நடுவர்கள் நியமிக்கப் படுகிறார்கள்.


 ஆறு தோட்டங்கள் மட்டும் கட்டணம் வசூலித்துக் கிடைக்கும் தொகையைப் பல பொது நல அமைப்புகளுக்கு அளிக்கின்றன. கார்னிவலுக்குப் பல மாதங்களுக்கு முன்பே தோட்டங்களை அழகுபடுத்துதல், இருக்கிற அமைப்பை மேலும் சிறந்ததாக மாற்றி அமைத்தல், புதிய புதிய செடிகளை வளர்த்தல் முதலிய வேலைகள் தொடங்கிவிடும்.





ஆஸ்திரேலியாவின் 'தோட்ட நகரம்' என ட்டூவூம்பா அழைக்கப்படுவது சாலப் பொருத்தம்தானே! 







No comments:

Post a Comment