Saturday 30 June 2012

நண்பர்கள்




திருவள்ளுவர் நட்புப் பற்றித் தொடர்ச்சியாக 50 குறள் இயற்றியதுடன் வேறு சில அதிகாரங்களிலும் 11 பாக்களில் அது குறித்துக் கூறுகிறார். ஆராய்ந்துதான் நட்புக் கொள்ளவேண்டும் என்பது அவரது முக்கிய அறிவுரை.

அது பண்டைக் காலத்தில் எல்லார்க்கும் பெரும்பாலும் பொருந்தியிருக்கும். போக்கு வரத்து வசதியும் தகவல் தொடர்பும் இல்லாத அக் காலத்தில் மக்கள் தம் எல்லாத் தேவைகளையும் நிரப்பிக்கொண்டு ஒரு சிறு பிரதேசத்துக்குள்ளேயே வாழ்ந்திருப்பார்கள். ஆதலால் நட்பாராய இயன்றிருக்கும். நம் காலத்திலுங்கூட கிராமங்களில் நிலைத்து வாழும் உழவர் பெருமக்களுக்குஅந்த வாய்ப்பு கிட்டுகிறது. ஆனால் நகர வாழ்க்கையில் யாருடன் நட்பு பாராட்டலாம் யாரைத் தவிர்க்கவேண்டும் என்றெல்லாம் ஆராய்ந்துகொண்டிருக்க முடிவதில்லை. நட்பு தானாகப் பிறக்கிறது, வளர்கிறது, மாய்கிறது.

"ஐந்து வயதினிலே அறியாப் பருவத்திலேபள்ளியில் உருவாகும் நட்பு நீடித்திருக்கும் என்று சொல்வதற்கில்லை. பள்ளி மாறினால், ஏன் வகுப்பு மாறினால்கூட,பழைய நட்பு போய்ப் புது நட்பு தோன்றலாம். கல்லூரி நண்பர்கள் யார்? பள்ளி நண்பர்கள் அல்லவே! கல்லூரி நட்பாவது நிரந்தரமா? அன்று, அன்று.

கல்வி முடிந்த பின்பு அலுவலகத்தில் சக பணியாளர் சிலருடன் நெருக்கம் உண்டாகிறது. விளையாட்டுக் களங்கள், பொழுது போக்குக் கழகங்கள், நற்பணி மன்றங்கள், தொழிற்சாலைகள் இன்ன பிறவும் நட்பு முகிழ்க்கும் கழனிகள்.

பொதுவாக நட்புக்கு இன்றியமையாதவை புணர்ச்சியும் பழகுதலும். அடிக்கடி சந்தித்து அளவளாவிக் கூடிச் செயல்படும்வரை நட்பு தொடரும், வளரும். இன்றேல் சிறிது சிறிதாய்க் குன்றி இல்லாகும். முழு மதி தேய்வதை உவமை காட்டுகிறார் வள்ளுவர். "அவுட் ஆஃப் சைட் அவுட் ஆஃப் மைண்ட்என்று ஆங்கிலத்தில் சொல்வர். "பார்வைக்கு அப்பால் மனத்துக்கு அப்பால்என்பது பொருள். இதே கருத்தைப் பிரஞ்சுப் பழமொழி கண்களுக்குத் தொலைவில், இதயத்துக்குத் தொலைவில்எனக் கூறுகிறது. ஆனால் இதற்கு மாறாக மொழிகிறாள் குறுந்தொகைத் தலைவி தன் காதலனைப் பற்றி:


"நெடுஞ்சேண் நாட்டார் ஆயினும்
நெஞ்சிற்கு அணியர்... (பா 228) 

அவர் நெடுந் தொலை நாட்டில் வாழினும் என் மனத்திற்கு அருகில் உள்ளார்என்பது அர்த்தம். 

கற்பனைத் தலைவி தானே என்று சிலர் நினைக்கலாம். ஆனால் மெய்யாகவே அப்படி வாழ இயலும் என்பதைப் பிசிராந்தையாரும் கோப்பெருஞ்சோழனும் உறுதிப்படுத்தியிருக்கின்றனர். இருவரும் வெவ்வேறு நாடுகளில் உறைந்தாலும் நெஞ்சிற்கு அணியராகவே வாழ்ந்திருக்கின்றனர். உணர்ச்சி மட்டுமே அவர்களைப் பிணைத்திருக்கிறது. அத்தகைய அரிய நட்பைப் பற்றித்தான் திருக்குறள் 

புணர்ச்சி பழகுதல் வேண்டா உணர்ச்சிதான்
நட்பாங் கிழமை தரும் 

என்கிறது.


என்னதான் அடிக்கடி சேர்ந்து பழகினாலும் சிலர் நம் நட்பைத் துறக்கின்றனர். காரணம் தெரியாமலே போகக்கூடும்.தக்க காரணத்துடன் பிரிவோர்கூட சிறிது காலம் சென்று மீண்டும் கூடினாலும் பழைய நெருக்கம் மீளாது என்பதை 

நீக்கமற இருவர் நீங்கிப் புணர்ந்தாலும்
நோக்கின் அவர்பெருமை நொய்தாகும்  

என்ற நன்னெறிப் பாடல் தெரிவிக்கிறது. 

காலப் போக்கில் நண்பன் பகைவன் ஆவதும் எதிரி தோழன் ஆவதும் உண்டு.ஆதலால் யாருடனும் அளவு மீறிப் பழகி நம் பலவீனங்களை வெளிப்படுத்தாமை நன்று. இவன் எதிரி ஆகக்கூடும் என்ற எச்சரிக்கை உணர்வு நம்மிடம் நிலை பெற்றிருப்பது நமக்குப் பாதுகாப்பு. அதேபோல இன்றைய வேண்டாதவன் நாளைய தோழனாகலாம் என்னும் நினைப்புடன் எல்லை கடந்து பகைமை பாராட்டாமல் ஒழுக வேண்டும். பகை நட்பாங் காலம் வரும்என்கிறார் திருவள்ளுவர். 

அரசியலில் நிரந்தர எதிரியும் இல்லை நிரந்தர நண்பனும் இல்லை என்னும் சந்தர்ப்பவாதிகளின் கொள்கை பொதுமக்களுக்கு ஒத்துவராது.

*******************************************************************

No comments:

Post a Comment