Friday 7 June 2013

பல்லி சொல்


 

பஞ்சாங்கத்தில், பல்லிசொல்லுக்குப் பலன் போட்டிருக்கிறது; அதை நம்புவோர் பற்பலர். மாந்தர் உரையாடிக் கொண்டிருக்கையில், கூரைப் பல்லி கத்துவதைக் கேட்டு, "பல்லி சொல்லிட்டுது!" என்று பரவசம் அடைவார்க்குப் பஞ்சமில்லை. இவர்களது கருத்துக்கு ஆதரவாய், பல்லி நல்ல சேதி தெரிவித்துவிட்டதாம். இந்த நம்பிக்கை பழங்காலத்திலிருந்து தொடர்ந்து கொண்டிருக்கிறது என்பது இலக்கியங்களால் தெரிகிறது. 

கலித்தொகை - 11 

மனைவயின் பல்லியும் பாங்குஒத்து இசைத்தன.
(தலைவர் வருவார் என்னும் நற்செய்தியைப் பல்லிகளும் கூறின.) 

நற்றிணை - 246 

நெடுஞ்சுவர்ப் பல்லியும் பாங்கில் தேற்றும்.
(தலைவரின் வருகையைத் தெரிவித்துப் பல்லி நம்மைத் தேற்றுகிறது) 

சத்திமுற்றப் புலவர் 

இந்தப் பிற்காலப் புலவர் 

நனைசுவர்க் கூரைப் பனைகுரல் பல்லி
பாடுபார்த்து இருக்கும் என்மனைவி 

என்றார்; " நான் திரும்பி வருவதைப் பல்லி முன்கூட்டி அறிவிக்கும் என்பதை எதிர்பார்த்து இருக்கும் என் மனைவி" என்று பொருள். 

கைப்பேசி இல்லாத காலத்தில், பல்லிதான், குடுகுடுப்பைக்காரர் போல, நல்ல செய்தி சொல்லி மக்களை மகிழ்வித்திருக்கிறது. 

இப்படிப்பட்ட உபகாரிக்குச் சில சமயம் தன் எதிர்காலம் தெரியாமல் போய்விடுவது பரிதாபம் அல்லவா? அதைத்தான் பின்வரும் பழமொழி வெளிப்படுத்துகிறது: 

ஊருக்கெல்லாம் சொல்லுமாம் பல்லி கழனிப் பானையில் விழுமாம் துள்ளி.

--------------------------------------------

3 comments:

  1. பழங்கால இலக்கியங்களில் உள்ளதை தொகுத்து தந்தமைக்கு வாழ்த்துக்கள்... நன்றி ஐயா...

    ReplyDelete

  2. கீத மஞ்சரியின் அறிமுகம் கண்டு இந்த தளத்துக்கு வந்தேன். என்னைவிட வயதில் மூத்தவர், தமிழாசிரியர், இலக்கியங்களில் இருந்து எடுத்துக்காட்டி பதிவிடும் பாங்கு. வணங்குகிறேன். நம் சமுதாயத்தில் ஏற்ற தாழ்வுகள் கண்டு வருந்துபவர்களில் நானும் ஒருவன். நம் ரத்தத்தில் ஊறிய சில எண்ணங்களுக்கு முடிவு கட்ட கல்வியே சிறந்தது என்று நினைத்து, சமன் செய்யும் கல்வி எப்படி இருக்கவேண்டும் என்று சிந்தித்து எழுதிய பதிவுக்கு பின்னூட்டமாக உங்கள் வலைத்தளத்தை அறிமுகப் படுத்தினார். நான் அதிகம் தமிழ் கற்காதவன். எழுதியதைப் படித்துப் பாருங்களேன்.

    ReplyDelete
  3. "ஊருக்கெல்லாம் சொல்லுமாம் பல்லி கழனிப் பானையில் விழுமாம் துள்ளி."நல்ல நகைச்சுவையான ரிதமிக்கான பழமொழி. இதுவரை இதைக் கேள்விப்பட்டதேயில்லை. அறியச் செய்தமைக்கு நன்றி.

    ReplyDelete