Monday 12 August 2013

கருமி (தொடர்ச்சி 2)

                   

பாத்திரங்கள் :
அர்ப்பாகோன்பெருஞ் செல்வர், கடைந்தெடுத்த கருமி.  
கிளையாந்த்து - மகன்
எலீஸ் - மகள் 
(மகனும் மரியானும் காதலர்; எலீஸ் வலேரை விரும்புகிறாள். இருகாதலும் அர்ப்பாகோனுக்குத் தெரியாது)

 அங்கம் - 1   காட்சி - 4    ( தொடர்ச்சி)

அர்ப்பாகோன்- வேறு விஷயம் பேசுவோம்.

   ( மக்கள் இருவரும் ஒருவருக்கு ஒருவர் மறைவாகச் சைகை காட்டுவதைப் பார்த்துவிடுகிறார். தம் பணத்தைக் கொள்ளையடிக்கத் திட்டமிடுவதாக நினைக்கிறார். உரத்த குரலில்):

என்ன அர்த்தம் இந்தச் சைகைகளுக்கு?

எலீஸ்- உங்களிடம் யார் முதலில் பேசுவது என்று விவாதிக்கிறோம். சொல்லுவதற்கு இருவரிடமும் சேதி இருக்கிறது.

அர்ப்பாகோன்- உங்களிடம் சொல்ல என்னிடமும் சேதி உண்டு.

கிளையாந்த்து- கல்யாணம் பற்றித்தான்,   அப்பா,  பேசவிரும்புகிறோம்.

அர்ப்பாகோன்- நானும் மணம் பற்றித்தான் உங்களிடம் பேச விரும்புகிறேன். நான் தொடங்குகிறேன். நம் வீட்டுக்கு அதிகத் தொலைவில் அல்லாமல் வசிக்கிற  மரியான் என்ற இளம் பெண்ணைப் பார்த்திருக்கிறாயா?

  (அண்ணனும் தங்கையும் கண் சாடை செய்துகொள்கிறார்கள்)

கிளையாந்த்து- பார்த்திருக்கிறேன்அப்பா.

அர்ப்பாகோன்- நீ?

எலீஸ்- அவளைப் பற்றிப் பேசக் கேட்டிருக்கிறேன்.

அர்ப்பாகோன்- அவளைக் குறித்து என்ன நினைக்கிறாய்,  மகனே?

கிளையாந்த்து- மிக அழகானவள்.

அர்ப்பாகோன்-- முகம்?

கிளையாந்த்து- நேர்மையையும் புத்திக்கூர்மையையும் காட்டுகிறது.

அர்ப்பாகோன்- இந்த மாதிரியான ஒரு பெண்,    பிறரால் நினைக்கப்படத் தக்கவள் என்று நீ கருதவில்லையா?

கிளையாந்த்து- கருதுகிறேன்அப்பா.

அர்ப்பாகோன்- விரும்பத்தக்க மனைவி என்று?

கிளையாந்த்து- மிக விரும்பத்தக்கவள்.

அர்ப்பாகோன்- நல்ல குடும்பம் நடத்துவாள்  என்பதற்கு எல்லா அறிகுறிகளும் கொண்டவள் என்று?

கிளையாந்த்து- சந்தேகம் இல்லாமல்.

அர்ப்பாகோன்- அவளால் கணவன் திருப்தி அடைவான் என்று?

கிளையாந்த்து- நிச்சயமாக.

அர்ப்பாகோன்- அதிலே ஒரு சின்ன சங்கடம். எதிர்பார்க்கிற அளவுக்கு அவளுடன் பணம் வராமற் போகலாம்.

கிளையாந்த்து- ஆஅப்பா,   பொருட்படுத்துவதற்கான தகுதி பணத்துக்கு இல்லை, ஒரு நல்ல பெண்ணை மணப்பது பற்றிய பிரச்சினையில்.

அர்ப்பாகோன்- நல்லதுநல்லதுஎன் கருத்தோடு நீ ஒத்துப் போவது கண்டு நான் அதிக மகிழ்ச்சி அடைகிறேன். ஏனென்றால்,   அவளுடைய ஒழுக்கமும் சாதுத் தனமும் என் மனத்தைக் கவர்ந்துவிட்டன. ஓரளவாவது பணம் கிடைக்குமானால் அவளைக் கல்யாணம் செய்துகொள்ள முடிவு செய்திருக்கிறேன்.

கிளையாந்த்து- என்னது?

அர்ப்பாகோன்- என்னதுன்னா?

கிளையாந்த்து- முடிவு செய்ததாய் சொல்கிறீர்கள்.

அர்ப்பாகோன்- ஆமாம்மரியானை மணந்துகொள்ள.

கிளையாந்த்து- யார்நீங்கள்நீங்களா?

அர்ப்பாகோன்- ஆம். நான்நான்நான். என்ன அர்த்தம் உன் கேள்விக்கு?

கிளையாந்த்து- திடீரென்று எனக்கு மயக்கம் வருகிறது,   நான் போகிறேன்.

அர்ப்பாகோன்- ஒன்றும் ஆகாது. ஒரு பெரிய கிளாஸ் தெளிந்த நீரைக் குடி. என்ன  இளைஞர்கள்! கோழிகளைவிட அதிக சக்தி இல்லாதவர்கள்.
இதுதான்மகளே,    நான் எனக்குச் செய்த முடிவு. உன் சகோதரனுக்கு ஒரு  கைம்பெண்ணைத் தேர்ந்திருக்கிறேன். உனக்கும் சேதி இருக்கிறது.  உன்னை ஆன்செல்ம் பிரபுவுக்குக் கொடுக்கிறேன்.

எலீஸ்- ஆன்செல்ம் பிரபுவுக்கா?

அர்ப்பாகோன்- அறிவு முதிர்ச்சியும் விழிப்புணர்வும் நல்ல குணங்களும் கொண்ட மனிதர். ஐம்பது வயதுக்குமேல் ஆகவில்லை. பெருஞ் சொத்துக்கு அதிபதி என்று பெயர் வாங்கியவர்.

எலீஸ்- எனக்குக் கல்யாணமே வேண்டாம்,   அப்பாதயவு செய்யுங்கள்.

அர்ப்பாகோன்- நானோ,   அருமை மகளேமணக்கோலத்தில் உன்னைப் பார்க்க விரும்புகிறேன்,   தயவு செய்.

எலீஸ்- ஆன்செல்ம் பிரபுவை நான் மதிக்கிறேன்,  ஆனால் மணக்கமாட்டேன்.

அர்ப்பாகோன்- மணப்பாய்,  இன்று மாலையே.

எலீஸ்- இன்று மாலையா?

அர்ப்பாகோன்- இன்று மாலைதான்.

எலீஸ்- நடக்காதுஅப்பா.

அர்ப்பாகோன்- நடக்கும்மகளே.

எலீஸ்- இப்படிப்பட்டவரை மணப்பதைக் காட்டிலும் நான் தற்கொலை செய்துகொள்வேன்.

அர்ப்பாகோன்- எதிர்த்துப் பேசுகிறாயா?   இதோவலேர். இவனிடம் கேட்போம்.

                                                                          (தொடரும்)

                                  -----------------------------------------

1 comment:

  1. அர்ப்பாகோனின் பணத்தாசையும் அதற்காக அவர் மேற்கொள்ளும் நடவடிக்கைகளும் பற்றி வாசிக்கையில் மனிதர்கள் உலகெங்கும் ஒரே மாதிரிதான் இருக்கிறார்கள் என்று நினைக்கத் தோன்றுகிறது. அவரிடம் மாட்டிக்கொண்ட பிள்ளைகளின் நிலை பரிதாபம்தான்.

    ReplyDelete