Monday 7 September 2015

குருவுக்கேற்ற சீடன்


  


  நம் காலத்து  சாமியார் பலர்,  பெருமளவில் பணஞ் சேர்த்து,  சொகுசாக வாழ்வது போலத்தான்  பழங்காலத்திலும் நிகழ்ந்திருக்கிறது . என்ன ஒரு வேறுபாடு?  இப்போது பத்திரமாகச் சேமித்து வைக்க வழிகளுண்டு ; முன்பு இல்லை.

  அப்போதைய சாமியாரொருவர், காவியுடை  தரித்து, அறப் போதனை செய்துகொண்டு, அருள் வாக்கு கூறித்  தட்சணை பெற்றும்   யாகம் பூசை என்று சொல்லிக்  கணிசமாகக் காணிக்கை வாங்கியும்  பொருள் திரட்டித் தங்கக் கட்டிகளாய் மாற்றி  ஒரு சிறு துண்டில் பொதிந்து  இடுப்பில் செருகிக்கொண்டு வாழ்ந்தார். சிறு தொகையை இன்பந் துய்க்கச் செலவிட்டுப் பிறவிப் பயனை அடைவதுண்டு.
    எந்த ரகசியமும் எப்படியோ வெளியில்  கசிந்துவிடும்துறவியின்  கமுக்கச் செயலைத்  தற்செயலாய்க் கண்டுபிடித்த  இளைஞனொருவன், பொன்னைக்  கைப்பற்றத் திட்டந் தீட்டினான். ஒரு  நாள், அவரை அணுகி, ஆறுறுப்புத்  தெண்டனிட்டு எழுந்து, "கலிகாலக் கண்கண்ட தெய்வமே! எனக்கு இந்த இள வயதிலேயே  உலகத்தின்மேல்  வெறுப்பு ஏற்பட்டு  விட்டது;  பற்றெல்லாம் அற்றுப் போனது; போகிற  கதி நல்லதாக இருக்க வேண்டும் என்பதற்காக  உங்களை குருநாதராகக் கொண்டு பணிவிடை  செய்து, புண்ணியம் பெருக்கிக்  காலங் கழிக்க விரும்புகிறேன். அருள் கூர்ந்து என்னை அடிமையாக ஏற்று ரட்சிக்க வேண்டும்" என வேண்டினான்.

  " உன் பெயர்  என்ன?

  --- முத்து,  குருவே.

  --- பெற்றோர்  எங்கே  இருக்கிறார்கள்?

  --- நான் அநாதை, குருவே;  அதனால்தான் வாழ்க்கையில்  விரக்தி.

  ---- என்ன வேலை செய்தாய்?

  ---- கூலி  வேலை, குருவே.

  --- சரி , எனக்கும்  சீடன் தேவைதான்; என்னுடன் இரு.

 --- குருதேவா, உங்கள்  அனுமதி  என் பாக்கியம்; உங்கள்  கருணைக்குப்  பாத்திரனாக  இருப்பேன், குருவே."

   இருவரும்  சேர்ந்து வாழ்ந்தனர். சாமியார்க்கு மன நிறைவு உண்டாகும்படி குற்றேவல்  செய்து  அவரது  நம்பிக்கையை  விரைவிலேயே  பெற்றான்  சீடன். குறி  மட்டும்  தங்கத்தில்;  ஏற்ற சமயத்தை எதிர்பார்த்திருந்தான்.

   ஒரு  நாள், பக்தரொருவர் வழங்கிய பகலுணவை உண்டுவிட்டுத் திரும்பி வருகையில், வழியில் கிடந்த வைக்கோல்  ஒன்றைச்  சாமியார் அறியாமல் எடுத்துத் தலைமேல் வைத்துக்கொண்டான்; இருப்பிடம்  அடைந்தபின், முத்துவைக்  கவனித்த சாமியார், "இதென்ன தலைமேல்  வைக்கோல்?" எனக் கேட்டபோது, அவன் திடுக்கிட்டாற்போல் நடித்து, "ஐயையோ! அபச்சாரம்! நாம் சாப்பிட்ட வீட்டில்  மாடு வைக்கோல் தின்றுகொண்டிருந்தது அல்லவா? நான் கை கழுவ அங்கே போனபோது அதில்  ஒன்று பறந்து  வந்து என் தலையில் ஒட்டிக்கொண்டது போலிருக்கிறது. எவ்வளவு பெரிய பாவம் செய்துவிட்டேன்உண்ட  வீட்டுக்கு  இரண்டகம் செய்யலாமா? குருவே, உத்தரவு  கொடுங்கள்; போய் வைக்கோலை  மாட்டிடம் போட்டு  வருகிறேன்" என்றான்.

     சம்மதித்த சாமியார், அவனைக் குறித்து  மிக  மேலான நல்லெண்ணம் கொண்டுவிட்டார்: "கேவலம் ஒரு  துரும்பு! அதைக்கூட உரியவரிடம்  சேர்க்க நினைத்து அவ்வாறே  செய்பவன் எவ்வளவு உத்தமன்! என்னிடமே பொருட் பற்று இருக்கிறதே! நம்பத் தகுந்த தலைசிறந்த சீடன் கிடைத்துள்ளான்."

    சில நாளுக்குப் பின்பு, செல்வத்தைச்  சீடனிடம் ஒப்படைத்துவிட்டு, ஆற்றில் குளிக்க நிம்மதியாய்ப் போனார் சாமியார்.

   முடிவைக்  கூற வேண்டுமா, என்ன?


              ++++++++++++++++++++++++++++++++++++
(படம் உதவி: இணையம்)

11 comments:

  1. சீடன் நிச்சயமாக குருவை ஏமாற்றித் தங்கத்தைப் பறிப்பான் என யூகிக்க முடிந்தது என்றாலும் அவனுடைய புத்திசாலித்தனம் மிகவும் ரசிக்கக் கூடியதாயிருந்தது. தொடர்ந்து எழுதுங்கள்.

    ReplyDelete
    Replies
    1. பின்னூட்டத்துக்கு மிக்க நன்றி . ஆமாம் , யூகிக்க முடியும் ;அவனது நோக்கம் நமக்குத் தெரியுமே .

      Delete
  2. ரசித்துப் படித்தேன்

    ReplyDelete
    Replies
    1. ரசித்து நீங்கள் படித்தமைக்கும் கருத்து தெரிவித்தமைக்கும் மிக்க நன்றி . ரசிகர்களால்தானே கலைகள் வளர்கின்றன ?

      Delete
  3. Replies
    1. பின்னூட்டத்துக்கும் வாக்குக்கும் மிக்க நன்றி . உங்களுக்கு இரக்க மனம் இருக்கிறது .

      Delete
  4. பசுத்தோல் போர்த்திய புலி என்பது இதுதானோ?

    ReplyDelete
    Replies
    1. சரியாகச் சொன்னீர்கள் . கருத்துரைக்கு மிக்க நன்றி .

      Delete
  5. சுவாரசியமான கதை. முந்தைய கதையைப் போலவே, இந்தக் கதையையும் இதற்குமுன் கேள்விப்பட்டதில்லை. குருவின் செல்வத்தைக் கவர்வதற்காக சிஷ்யன் மேற்கொள்ளும் தந்திரம் நல்ல வேடிக்கைதான்.

    சாஷ்டாங்கமாக நமஸ்கரித்தெழுந்தான் என்றே கேட்டுப்பழகிய நிலையில், ஆறுறுப்புத் தெண்டனிட்டெழுந்தான் என்ற தமிழ்ப்பதம் ரசிக்கவைத்தது.

    சுவையான கதைப்பகிர்வுக்கு மிகவும் நன்றி.

    ReplyDelete
    Replies
    1. ஆழமான திறனாய்வுக்கு மிக்க நன்றி . பாராட்டுக்கும்தான் .

      Delete
  6. வணக்கம்...

    தங்களின் வருகைப் பதிவு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது... நன்றிகள்...

    visit and check : http://dindiguldhanabalan.blogspot.com/2015/08/Tamil-Writers-Festival-2015-2.html

    how is it ...? excited...? put a comment... thank you...

    அன்புடன்
    பொன்.தனபாலன்
    9944345233

    ReplyDelete