Sunday 17 July 2016

என்னென்னவோ



1. இந்தியப் பிரதமரின் சரியான பெயர் நரேந்திர மோதி; இவ்வாறுதான் இந்தியில் எழுத/சொல்லப்படுகிறது.


2. ரோமானியர் பிரான்சைக் கைப்பற்றிய பின்பு (அப்போது அதன் பெயர் 'கோல்' Gaule) இங்கிலாந்தைப் பிடித்து ப்ரிட்டானியா எனப் பேர் வைத்தனர்; காலப்போக்கில் அது கிரேட் ப்ரிட்டன் ஆனது; கிரேட் (Great) என்னும் அடைமொழி எதற்காக?




    பிரான்சின் தேசப்படத்தைப் பாருங்கள்: அதன் மேற்குப்பகுதி, ஒட்டகத் தலைபோல் அட்லாண்டிக் பெருங்கடலில் நீட்டிக்கொண்டிருக்கிறதல்லவா? அதற்கு  பிரஞ்சில் ப்ரெத்தாஞ் (Bretagne) என்று பெயர்; ஆங்கிலத்தில் பிரிட்டன். இதைவிட  இங்கிலாந்து விசாலமானது ஆதலால் அது  க்ரேட் பிரிட்டன்

      3. பிரஞ்சில் 'வா' என்றால், தமிழில் போ' என்று பொருள்; இந்தியில் 'நாக்' எனில் தமிழில் 'மூக்கு'.

    4. திங்கட்கிழமைதான் பிரஞ்சுக்காரர்களுக்கு வாரத்தின் முதல் நாள்.   கர்த்தர் தம் படைப்புகளை ஆறு நாளில் செய்து முடித்துக் கடைசி நாள் ஓய்வெடுத்தார்அது ஞாயிற்றுக்கிழமை; ஆகவேதான் ஞாயிறு விடுமுறை விடுகிறோம் என்பது அவர்கள் சொல்லும் காரணம்.

    5. பிரஞ்சு தேசிய கீதத்தின் பெயர் லா மர்செய்யேஸ் (La Marseillaise).

  1789-இல் வெடித்த புரட்சியை அடுத்த மூன்றாமாண்டு ஆஸ்த்ரியா (Austria) நாட்டை எதிர்த்துப் போர் நிகழ்ந்தது; பிரான்சு - ஜெர்மனி எல்லையில் உள்ள   ஸ்த்ராஸ்பூர் (Strasbourg) நகரில் நிலை கொண்டிருந்த 'ரேன் சேனை' யின் தளபதி ருழே தெ லீல் (Rouget de Lisle) தம் படையினரை ஊக்குவிப்பதற்காக ஒரு பாட்டு இயற்றி இசையமைத்து 'ரேன் சேனையின் பாடல்' எனத் தலைப்பிட்டார். அது பிரபலமடைந்து பரவலாய்ப் பாடப்பட்டது.

  சில மாதங்களுக்குப் பின்புபாரீசில் கொண்டாடப்பட்ட விழா ஒன்றில்தென் துறைமுகமாகிய மர்சேயிலிருந்து (Marseiille) வந்த பிரதிநிதிகள் அந்தப் பாடலை அங்கு அறிமுகப்படுத்தவே, தலைப்பு மாறி, அவ்வூரின் பெயரைப் பெற்றது.

    6.  19-ஆம் நூற்றாண்டுப் பிரஞ்சுக் கவிஞர் ரைம்போ (Rimbaud) மின்னலை இவ்வாறு வர்ணித்தார்: 'வானத்தில் விரிசல்!'

   7. கொலம்பசுக்குப் பிறகு, அமெரிக்காவுக்கு ஆய்வுப் பயணம் மேற்கொண்டவர் அமெரிகோ வெஸ்ப்பூச்சி - Amerigo Vespucci; இவரும் இத்தாலியர். வெனிஜுலா பகுதியைக் கண்டுபிடித்தவர் இவரே.




    அமெரிக்க தேசப்படத்தை முதன்முதலில் வரைந்தவர்கள் இவருடைய பெயரைக் கண்டத்துக்கு வைத்துவிட்டார்கள்; கொலம்பஸ் பேரைத்தான் சூட்டியிருக்க வேண்டும். இருப்பினும், கொலம்பசின் நினைவு பலவாறு நிலைநாட்டப்பட்டுள்ளது:

) - தென்னமெரிக்க நாடு ஒன்று: கொலோம்பிஆ (Colombia).
) - அமெரிக்காவின் தென்கரோலினா மாநிலத்தின் தலைநகர்: கொலும்பிஆ (Columbia).
) - ஒஹிஓ மாநிலத் தலைநகரம்: கொலும்பஸ் (Columbus).
) - அமெரிக்க ஆறு ஒன்றன் பெயர்: கொலும்பிஆ.

        கொலம்பஸ் அமெரிக்காவைக் கண்டுபிடித்த தேதி12-10-1492.  அதைச் சிறப்பிக்க ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் இரண்டாம் திங்கட்கிழமையில், 'கொலம்பஸ் நாள்என்னும் பெயரில், அமெரிக்க ஐக்கிய நாடுகளில், தேசிய விடுமுறை விடுகிறார்கள்மத்திய, தென் அமெரிக்க தேசங்கள் சிலவும் கொண்டாடுகின்றன.

    8. சங்கத்தமிழில் நிகழ்காலம் இல்லை; நிகழ்காலத்தில் கூறவேண்டியதை எதிர்காலத்தில் கூறினர்.

     9. வான்மீகி ராமனுக்கு மனைவியர் பலருண்டு.

     10.  சகுந்தலையைக் காதலித்து கந்தர்வ மணம் செய்துகொண்ட துஷ்யந்தன் ஏற்கனவே மணமானவன்.


                                                 ++++++++++++++++++++++++++++++++++++++

Saturday 9 July 2016

சீன இலக்கியம்

நூல்களிலிருந்து -- 8

முனைவர் இரா.அறவேந்தன் 'உலகப் பார்வையில் தமிழிலக்கியம்' என்னும் தொகுப்பு நூலை 2003-இல் பதிப்பித்திருக்கிறார்; வெவ்வேறு எழுத்தாளர்களின் ஒன்பது கட்டுரைகள் அடங்கிய அதில், 'தமிழ் சீன இலக்கியப் போக்குகள்' என்ற தலைப்பில் முனைவர் மா. பா. குருசாமி இயற்றியுள்ள படைப்பின் சில பகுதிகளைப் பகிர்கிறேன்.

      சீன இலக்கியம்

 சீன இலக்கியத்தை ஒரு தொகுப்பாக வைத்துப் பார்த்தோமானால், அதில் எண்ணிலடங்காத கவிதைகள் மண்டிக் கிடப்பது முதலில் தென்படுகிறது. அடுத்தாற்போல் சரித்திர நூல்கள், பின்னர் அகராதிகள் முதலியன; அப்புறம் வான சாஸ்திரம் முதலிய சாஸ்திர வகைகள்; கணக்கிலடங்காத சமய நூல்களும் மொழிபெயர்ப்பு நூல்களும் பிறவும் இந்தத் தொகுப்பில் காணக்கிடைக்கின்றன.

  தமிழ் இலக்கியத்தில் முதலில் கவிதைகள் கால்  கொண்டன; அகம், புறம், முதலிய சங்கப் பாடல்களும் சிலப்பதிகாரம் முதலான காப்பியங்களும் செய்யுளால் ஆனவைஉரைநடை பின்னால் தோன்றியது.

  சீன மொழியிலோ, முதலில் உரைநடைதான் வளம் பெற்றதுகி.மு. 400 இல் உரைநடையில் எழுதத் தொடங்கினர்; 8-ஆம் நூற்றாண்டிலேயே அச்சுக் கலை வளர்ந்துவிட்டது. சீனர்கள் தங்கள் முன்னோர்களின் வரலாற்றை  வரைவதில் தனிக் கவனம் செலுத்தியுள்ளனர்.

 கி. மு. 771 முதல் 221 வரை, தான்தோன்றி மன்னர்களின் ஆட்சியால் குழப்ப நிலை நிலவியது; மக்கள் ஏமாற்றமும் வெறுப்பும் கசப்பும் கொண்டு வாழ்ந்தனர்; இந்த நிலையில் வழிகாட்டத் தோன்றிய ஞானிகள் அறநெறி இலக்கியங்களைப் படைத்தனர்; அவர்களுள் லாவோட்சேயும் கன்ஃபூசியசும் குறிப்பிடத்தக்கவர்கள்.


confucius

Laozi


  லாவோட்சே தம் நல்வழியை விளக்கி ஒரு நூல் எழுதினார். அவர் காட்டிய நல்வழிக்கு டாவோ (Tao) என்று பெயர். கடந்த கால எளிமைக்குத் திரும்பிஇயற்கை வழி வாழ வேண்டுமென்பதே டாவோ தத்துவம்.

  கன்பூசியஸ்  உலகப் புகழ் பெற்ற தத்துவ ஞானிஇவரைப் பற்றி, 'இவர் ஒரு அறநெறியாளர், ராஜதந்திரி, குருகுல மகான், பழைய நூல்களைத் தொகுத்த பதிப்பாசிரியர், கவிஞர், சங்கீத மேதை' என்று கூறப்படுகிறது. இவர்தனி வாழ்விலும் பொது வாழ்விலும் அறவழியில் வாழவேண்டுமென வலியுறுத்தினார்அறநெறி அமைந்த அரசே சிறந்ததென்று விளக்கினார். சீன இலக்கிய வளர்ச்சிக்கு அவர் அடித்தளம்  இட்டார்.

   உரைநடை இலக்கியத்தைவிடக் கவிதை இலக்கியம் சிறப்பிடம் பெற்றுள்ளது; எண்ணற்ற கவிஞர்கள் வாழ்ந்தார்கள்; பெரும்பாலும் குறுங் கவிதைகளே உருவெடுத்திருக்கின்றனபெரிய காப்பியங்கள் சீன மொழியில் தோன்றவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மக்கள் பயன்படுத்துகிற எளிய சொற்களையே சீனப் புலவர்கள் கையாண்டிருக்கிறார்கள். அவர்கள் இயற்கையைப் பாடுவதில் தனியார்வம் கொண்டவர்கள். சீன இலக்கியத்தில் சிறு கதைகளுக்கும் முக்கிய இடமுண்டு; பெரும்பாலானவை இரண்டு மூன்று பக்கங்களுள் அடங்கக்கூடியவை; கணவன் - மனைவி உறவுமனித உறவுச் சிக்கல்கள், காதல், நட்புவாழ்க்கையில் காணப்படும் குறைகள் போன்றவற்றைத் தொட்டுக் காட்டுவனவாகக் கதைகள் உள்ளன; கருத்துகளுக்கே முதன்மையான இடமளித்திருக்கின்றனர்.

  சீன இலக்கியம் பொதுவுடைமை ஆட்சியில் கட்டுத்திட்டங்களுக்குள் வளர்கிறது; மா சேதுங், 'மக்கள் ஜனநாயக சர்வாதிகாரத்துக்குத் துணைசெய்யும் வகையில் இலக்கியம் இருக்க வேண்டும்' என்றார். அதன்படி பொதுவுடைமை இலக்கியம் மட்டுந்தான் சீனாவில் வாழ, வளர இயலும். சீன இலக்கியம் கட்டுப்பாட்டுக்குள் வாழ்ந்தாலும், நாட்டின் மொழியாகவும் மக்களின் வாழ்க்கைமொழியாகவும், சீன மொழி  இருப்பதால், அது வளரமேன்மை பெற, எதிர்காலத்தில் தளைகள் நீங்கி, வீறுகொண்டு நடைபோட வாய்ப்பு இருக்கின்றது; தமிழிலக்கியம் சுதந்தர சூழலில் வாழ்ந்தாலும், மொழியுணர்வும் மொழிப்பற்றும் தேய்ந்து வருவதால், எதிர்கால வளர்ச்சி கேள்விக்குறியாகிறது.


+++++++++++++++++++++++++++
(படங்கள் உதவி இணையம்)