Saturday 9 July 2016

சீன இலக்கியம்

நூல்களிலிருந்து -- 8

முனைவர் இரா.அறவேந்தன் 'உலகப் பார்வையில் தமிழிலக்கியம்' என்னும் தொகுப்பு நூலை 2003-இல் பதிப்பித்திருக்கிறார்; வெவ்வேறு எழுத்தாளர்களின் ஒன்பது கட்டுரைகள் அடங்கிய அதில், 'தமிழ் சீன இலக்கியப் போக்குகள்' என்ற தலைப்பில் முனைவர் மா. பா. குருசாமி இயற்றியுள்ள படைப்பின் சில பகுதிகளைப் பகிர்கிறேன்.

      சீன இலக்கியம்

 சீன இலக்கியத்தை ஒரு தொகுப்பாக வைத்துப் பார்த்தோமானால், அதில் எண்ணிலடங்காத கவிதைகள் மண்டிக் கிடப்பது முதலில் தென்படுகிறது. அடுத்தாற்போல் சரித்திர நூல்கள், பின்னர் அகராதிகள் முதலியன; அப்புறம் வான சாஸ்திரம் முதலிய சாஸ்திர வகைகள்; கணக்கிலடங்காத சமய நூல்களும் மொழிபெயர்ப்பு நூல்களும் பிறவும் இந்தத் தொகுப்பில் காணக்கிடைக்கின்றன.

  தமிழ் இலக்கியத்தில் முதலில் கவிதைகள் கால்  கொண்டன; அகம், புறம், முதலிய சங்கப் பாடல்களும் சிலப்பதிகாரம் முதலான காப்பியங்களும் செய்யுளால் ஆனவைஉரைநடை பின்னால் தோன்றியது.

  சீன மொழியிலோ, முதலில் உரைநடைதான் வளம் பெற்றதுகி.மு. 400 இல் உரைநடையில் எழுதத் தொடங்கினர்; 8-ஆம் நூற்றாண்டிலேயே அச்சுக் கலை வளர்ந்துவிட்டது. சீனர்கள் தங்கள் முன்னோர்களின் வரலாற்றை  வரைவதில் தனிக் கவனம் செலுத்தியுள்ளனர்.

 கி. மு. 771 முதல் 221 வரை, தான்தோன்றி மன்னர்களின் ஆட்சியால் குழப்ப நிலை நிலவியது; மக்கள் ஏமாற்றமும் வெறுப்பும் கசப்பும் கொண்டு வாழ்ந்தனர்; இந்த நிலையில் வழிகாட்டத் தோன்றிய ஞானிகள் அறநெறி இலக்கியங்களைப் படைத்தனர்; அவர்களுள் லாவோட்சேயும் கன்ஃபூசியசும் குறிப்பிடத்தக்கவர்கள்.


confucius

Laozi


  லாவோட்சே தம் நல்வழியை விளக்கி ஒரு நூல் எழுதினார். அவர் காட்டிய நல்வழிக்கு டாவோ (Tao) என்று பெயர். கடந்த கால எளிமைக்குத் திரும்பிஇயற்கை வழி வாழ வேண்டுமென்பதே டாவோ தத்துவம்.

  கன்பூசியஸ்  உலகப் புகழ் பெற்ற தத்துவ ஞானிஇவரைப் பற்றி, 'இவர் ஒரு அறநெறியாளர், ராஜதந்திரி, குருகுல மகான், பழைய நூல்களைத் தொகுத்த பதிப்பாசிரியர், கவிஞர், சங்கீத மேதை' என்று கூறப்படுகிறது. இவர்தனி வாழ்விலும் பொது வாழ்விலும் அறவழியில் வாழவேண்டுமென வலியுறுத்தினார்அறநெறி அமைந்த அரசே சிறந்ததென்று விளக்கினார். சீன இலக்கிய வளர்ச்சிக்கு அவர் அடித்தளம்  இட்டார்.

   உரைநடை இலக்கியத்தைவிடக் கவிதை இலக்கியம் சிறப்பிடம் பெற்றுள்ளது; எண்ணற்ற கவிஞர்கள் வாழ்ந்தார்கள்; பெரும்பாலும் குறுங் கவிதைகளே உருவெடுத்திருக்கின்றனபெரிய காப்பியங்கள் சீன மொழியில் தோன்றவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மக்கள் பயன்படுத்துகிற எளிய சொற்களையே சீனப் புலவர்கள் கையாண்டிருக்கிறார்கள். அவர்கள் இயற்கையைப் பாடுவதில் தனியார்வம் கொண்டவர்கள். சீன இலக்கியத்தில் சிறு கதைகளுக்கும் முக்கிய இடமுண்டு; பெரும்பாலானவை இரண்டு மூன்று பக்கங்களுள் அடங்கக்கூடியவை; கணவன் - மனைவி உறவுமனித உறவுச் சிக்கல்கள், காதல், நட்புவாழ்க்கையில் காணப்படும் குறைகள் போன்றவற்றைத் தொட்டுக் காட்டுவனவாகக் கதைகள் உள்ளன; கருத்துகளுக்கே முதன்மையான இடமளித்திருக்கின்றனர்.

  சீன இலக்கியம் பொதுவுடைமை ஆட்சியில் கட்டுத்திட்டங்களுக்குள் வளர்கிறது; மா சேதுங், 'மக்கள் ஜனநாயக சர்வாதிகாரத்துக்குத் துணைசெய்யும் வகையில் இலக்கியம் இருக்க வேண்டும்' என்றார். அதன்படி பொதுவுடைமை இலக்கியம் மட்டுந்தான் சீனாவில் வாழ, வளர இயலும். சீன இலக்கியம் கட்டுப்பாட்டுக்குள் வாழ்ந்தாலும், நாட்டின் மொழியாகவும் மக்களின் வாழ்க்கைமொழியாகவும், சீன மொழி  இருப்பதால், அது வளரமேன்மை பெற, எதிர்காலத்தில் தளைகள் நீங்கி, வீறுகொண்டு நடைபோட வாய்ப்பு இருக்கின்றது; தமிழிலக்கியம் சுதந்தர சூழலில் வாழ்ந்தாலும், மொழியுணர்வும் மொழிப்பற்றும் தேய்ந்து வருவதால், எதிர்கால வளர்ச்சி கேள்விக்குறியாகிறது.


+++++++++++++++++++++++++++
(படங்கள் உதவி இணையம்)



2 comments:

  1. சிந்திக்க வைக்கும் சிறப்பான தகவல்கள். பகிர்வுக்கு நன்றிகள், ஐயா.

    ReplyDelete
    Replies
    1. தொடர்ந்து பாராட்டும் உங்களுக்கு என் மனம் நிறை நன்றி .

      Delete